ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக வாழ்வதைப் பொறுக்காத முன்னாள் கணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியையும் அவரது தாயையும் கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதாநகரம் மண்டலம் பொபிலங்கா கிராமத்தைச் சேர்ந்த சீதாராமராஜு (36) மற்றும் லதா (31) ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சீதாராமராஜுவுக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவியைப் பிரிய விரும்பிய சீதாராமராஜு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி முறையிட்டார். அதன்படி, இரு வீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி பிரிந்தனர். அதன் பிறகு, தான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணையே சீதாராமராஜு இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

கணவரைப் பிரிந்த லதா, தனது தாய் வீட்டிற்குத் திரும்பித் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்தார். லதாவின் தாய் வீடும், சீதாராமராஜுவின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால், இருவரும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தன்னை விட்டுப் பிரிந்த பிறகும் லதா கவலையின்றி மகிழ்ச்சியாக இருப்பதைச் சீதாராமராஜுவால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

லதா மீதான ஆத்திரத்தில் இருந்த சீதாராமராஜு, தனது நண்பர்கள் இருவருடன் லதாவின் வீட்டிற்குள் புகுந்தார். அங்கு லதாவைச் சரமாரியாகக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்டு தடுக்க வந்த லதாவின் தாய் லட்சுமியையும் (55) அந்தக்கும்பல் அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற முக்கியக் குற்றவாளி சீதாராமராஜுவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் இருவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே தெருவில் வசித்த முன்னாள் கணவனே, மனைவியையும் மாமியாரையும் படுகொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.