சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு சுவாரஸ்யமான காணொளி தற்போது பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை மட்டுமே பெரிய மனிதர்களாகப் பார்க்கும் மனநிலை பரவலாக உள்ளது.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, சாலையோரத் தள்ளுவண்டியில் மேகி மற்றும் சோலே குல்சே போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் ஒரு எளிய வியாபாரியின் மாதாந்திர வருமானம் குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Komalnegi🦋 (@bykomal_raw)

பிரபல டிஜிட்டல் கிரியேட்டர் கோமல் நேகி என்பவர் சம்பந்தப்பட்ட உணவு வண்டி உரிமையாளரிடம் நடத்திய நேர்காணல் தான் இந்த விவாதத்திற்குக் முக்கியக் காரணமாகியுள்ளது.

அந்தக் காணொளியில், தனது கடைக்கு வந்துசெல்லும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரம் குறித்துப் பேசும் அந்த வியாபாரி, தனது மாத வருமானம் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த சிரிப்புடன் கோமல் நேகி, “என் சொந்தச் சம்பளத்தை வெளியே சொன்னால் அசிங்கமாகிவிடும் போலிருக்கிறதே!” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

மேலும், தள்ளுவண்டி வியாபாரம் செய்பவர்களைச் சாதாரணமாக எண்ணி ஒதுக்குபவர்கள் இனிமேலாவது தங்களது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த வைரல் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கமெண்டுகளால் இணையத்தை அதிரவைத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், சரியான இடமும் கடின உழைப்பும் இருந்தால் எந்தவொரு சிறிய தொழிலும் மிகப்பெரிய லாபத்தைத் தரும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.