இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வரும் நிலையில், தொலைதூரப் பகுதிகள் மற்றும் சிக்னல் கிடைக்காத இடங்களில் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் படும் அவதிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது.

இணைய வசதி இல்லாத இடங்களிலும் யுபிஐ மூலம் தடையின்றிப் பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பயன்படுத்தப்படும் ‘NFC’ தொழில்நுட்பத்தை இனி யுபிஐ சேவையிலும் விரிவுபடுத்த தேசியப் பண வழங்கீட்டுக் கழகம்  முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்கள், சுரங்கப்பாதைகளில் இயங்கும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமானப் பயணங்களின் போது இணைய இணைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் பணம் செலுத்த முடியாமல் தவிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையின் மூலம், பிஓஎஸ் இயந்திரங்களில் இன்டர்நெட் இல்லாமலேயே உங்களது மொபைல் போனைப் பயன்படுத்தி எளிதாகப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இதன் மூலம் சிக்னல் கிடைக்காத இடங்களில் தவிக்க வேண்டிய கட்டாயம் இனி பொதுமக்களுக்கு இருக்காது.

புதிய திட்டத்தின் தொடக்கக் கட்டத்தில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இணையம் இல்லாமல் அதிகபட்சமாக ரூ.2,000 வரை மட்டுமே பணம் செலுத்த தேசியப் பண வழங்கீட்டுக் கழகம் அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ள இந்த அசத்தல் வசதி விரைவில் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வரலாற்றில் இது ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.