அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்படும் எரிவாயுவை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் போக்கு, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால், அது இந்தியாவையும் பாதிக்கும். இதனை முன்னெச்சரிக்கையாகக் கையாளுவதே அரசின் இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.

சமையல் எரிவாயு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் புரோபேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் துறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மூலப்பொருட்கள் அனைத்தும் தடையின்றி வீட்டு உபயோக சமையல் எரிவாயு தயாரிப்பிற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இந்தியா தனது மொத்த எல்பிஜி தேவையில் சுமார் 60 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் விலை உயர்வு அல்லது கடல் வழித்தடங்களில் இடையூறு ஏற்பட்டால், அது உள்நாட்டில் சிலிண்டர் விநியோகத்தைப் பாதிக்கும். எனவே, உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதன் மூலம் விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் அரசின் இந்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நெருக்கடி காலத்திலும் சாமானிய மக்களுக்குப் போதுமான எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் இந்த முடிவு, பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது