கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாக இருந்த அந்த மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
இந்தக் கொடூரக் கொலையில் அந்த வீட்டில் பணிபுரிந்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணே மூளையாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் ஒரு கூலிப்படையையே ஏவி, மூதாட்டியைத் திட்டம் போட்டுத் தீர்த்துக்கட்டிவிட்டு நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார். வீட்டு வேலைக்குச் சேருபவர்களின் பின்னணியைச் சரிபார்க்காமல் வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அந்த நேபாளப் பெண் மற்றும் கூலிப்படையைத் தேடித் தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
