முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா, அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறாமல் மதுரையில் நடைபெறுவது திமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவதால், அங்குப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்ட முடியாது என ஓபிஎஸ் தரப்பு கருதியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சொந்த மண்ணிலேயே தனது பலத்தைக் காட்ட முடியாமல் போனால் அது அரசியல் ரீதியாகப் பின்னடைவைத் தரும் என்பதால், அவர் மதுரையைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

​மதுரையில் விழா நடத்தினால், அங்குள்ள திமுக அமைச்சர்களான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் கட்சி ரீதியாகப் பெரும் கூட்டத்தைத் திரட்டி விடுவார்கள் என்றும், அது தனது பலமாக வெளியில் தெரியும் என்றும் ஓபிஎஸ் கணக்குப் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மற்றவர்களின் செல்வாக்கை வைத்துத் தனது பலத்தை நிரூபிக்க ஓபிஎஸ் முயல்வது திமுகவின் ஒரு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேனி மாவட்ட அரசியலில் ஓபிஎஸ்ஸின் பிடி நழுவி வருவதையே இந்த இடமாற்றம் காட்டுவதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.