பாலிவுட் திரையுலகிலும், இந்திய தொலைக்காட்சித் துறையிலும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும், மாடல் அழகியாகவும் வலம் வருபவர் மௌனி ராய். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாகினி’ தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சீசன்களில் சிவன்யா, சிவாங்கி ஆகிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடமும் இவர் பிரபலமானார். கடந்த 2022-ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையில் இணைந்த மௌனி ராய், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நடப்பு 2026-ஆம் ஆண்டில் சமூக வலைத்தளம் வாயிலாகத் தனது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், அவர் குறித்த பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன.சமீபத்தில் யூடியூபில் வெளியான மோனிகா ஷர்மாவின் அரட்டை நிகழ்ச்சியில் நடிகை மௌனி ராய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, தன்னைப்பற்றி வெளியான மிகப்பெரிய வதந்தி எது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என்று பரவிய வதந்திதான் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், தனது வாழ்வின் இக்கட்டான மற்றும் மோசமான காலகட்டங்களில் தனக்குப் பாறையாக உறுதுணையாக நின்ற குடும்பத்தினருக்கும், உண்மையான தோழிகளுக்கும் நன்றி தெரிவித்ததுடன், பெண்களை உற்சாகப்படுத்தும் நல்ல தோழிகள் ஒவ்வொருவர் வாழ்விலும் அமைவது அவசியம் என்றும் கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
