கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், கணவரைப் பிரிந்து தனது 6 வயது மகன் அபிஷேக் மற்றும் 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அட்டைபெட்டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த திவ்யாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை (35) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் தனிமைக்குக் குழந்தைகள் இடையூறாக இருப்பதாகக் கருதி, இருவரையும் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். ஒருமுறை பள்ளிக்கு வந்த தனது தந்தையிடம், “அம்மாவும் வீட்டுக்கு வரும் மாமாவும் சேர்ந்து என்னை அடிக்கிறார்கள், என்னைக் கூட்டிச் சென்று விடுங்கள்” என சிறுவன் அபிஷேக் கதறி அழுதுள்ளான்.

இந்த நிலையில், கடந்த 19.4.2020 அன்று  சிறுவன் அபிஷேக்கை திவ்யாவும், ராஜதுரையும் சேர்ந்து கம்பால்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களைக் கண்டித்துள்ளனர். இதற்கிடையே, பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தாய் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட திவ்யா மற்றும் ராஜதுரை மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 22-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.