சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் இல்லத் திருமண விழாவைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் ஆற்றலையும், கொள்கைப் பிடிப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.

நெருக்கடி நிலை காலத்தில் சிறைச்சாலையில் தமக்கு ஆற்காடு வீராசாமி வழங்கிய அறிவுரைகளை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின், மிசா கொடுமையால் ஏற்பட்ட தழும்பு இன்றும் தனது கையில் உள்ளதாக உருக்கமாகக் குறிப்பிட்டார். மேலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்று அவர் பெருமிதத்துடன் பேசினார்.

தொடர்ந்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஊடகங்கள் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் கோட் அணிவதும், பட்டு வேட்டி அணிவதும், அவர் செஸ் விளையாடுவதும்தான் இன்றைக்குப் பெரிய செய்திகளாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன என்று விமர்சித்தார். “ஆட்சியைப் பற்றி வரும் செய்திகளை ஆட்சியாளர்கள் முழுமையாகப் படியுங்கள்; படித்துவிட்டு அதில் உள்ள உண்மைகளைக் கண்டுபிடித்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே எனது அன்பான வேண்டுகோள்” என்று முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும் திமுக எம்பி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியுள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.