தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த அவருக்கு, தமிழ்ப் பாடத்தில் மட்டும் எதிர்பார்த்ததை விடக் குறைவாக 91 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது தமிழ்ப் பாட விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி அதன் நகலைப் பெற்றுப் பார்த்தபோது மேலும் ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. விடைத்தாளின் முதல் பக்கத்தில் வினா வாரியாகவும், பக்க வாரியாகவும் கூட்டப்பட்ட மதிப்பெண்களின் கூட்டுத்தொகை 100-க்கு 101 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விடைத்தாள் திருத்திய ஆசிரியர், இரு இடங்களிலும் கூட்டுத்தொகை 101 என்று சரியாகக் கூட்டிவிட்டு, இறுதி மதிப்பெண் போடும் இடத்தில் மட்டும் அலட்சியமாக 91 என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 5 மதிப்பெண் வினாக்கள் இரண்டிற்கு தலா 7 மதிப்பெண்கள் என 4 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. விடைத்தாள் திருத்திய ஆசிரியர், கூர்ந்தாய்வு செய்தவர், தலைமை தேர்வாளர் ஆகிய மூன்று நிலைகளிலும் இந்தத் தவறு கவனிக்கப்படாமல் மதிப்பெண் பட்டியலிலும் 91 என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் இந்த அசாத்திய அலட்சியத்தால் தனக்கு மதிப்பெண்கள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அம்மாணவி, இது குறித்து தஞ்சை தேர்வுத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் முறையிட்டு, தற்போது மீண்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
