ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி மண்டலத்தின் டொண்டாவாகா பகுதியில், 3 வயது சிறுமி ஜாஹ்னவி கடந்த 12 நாட்களாகக் காணாமல் போயிருப்பது பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த பாமாயில் தோட்டத்தில் காணாமல் போன அச்சிறுமியைத் தேடும் பணியில் என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையில் நள்ளிரவிலும் செயல்படக்கூடிய அதிநவீன தெர்மல் ட்ரோன்கள், ஜிபிஎஸ் டிராக்கிங் மற்றும் ரேடியேஷன் டிடெக்டர் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தோட்டத்தில் மர்மமான முறையில் இரண்டு பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தது உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் மாந்தீரிக சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால், ஏதேனும் கொடூர விலங்குகள் அல்லது மலைப்பாம்புகள் சிறுமியைத் தாக்கியிருக்குமா என்பதை அறிய, கோழி இறைச்சியைப் பொம்மைகளில் கட்டி காவல்துறையினரே அந்தப் போலி காட்சியை அமைத்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த மர்மமான சம்பவத்தில் மற்றொரு திடுக்கிடும் திருப்பமாக, சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை மோப்ப நாய் ஒன்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது இந்த வழக்கின் தீவிரத்தையும் மர்மத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து தினசரி விசாரணை அறிக்கையைப் பெற்று வருவதாகக் கூறியுள்ளார். மேலும், உயிரிழந்த மோப்ப நாயின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அதன் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
