இந்தியா முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலி மூலம் போலி செய்திகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் வேகமாகப் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஜூன் 22ஆம் தேதி முதல் நாடு முழுவதும் டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளதோடு, மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியையும் ஜூன் 30ஆம் தேதி வரை முடக்கியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை விமர்சிக்கும் வகையில் டெலிகிராம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஒரு ஷாப்பிங் மாலில் திருட்டு நடக்கலாம் என்பதால் அனைத்து மால்களையும் மூடிவிட வேண்டும். யாரோ ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக நான் கேள்விப்பட்டதால், சாலைகளையும் மூடிவிடுங்கள்” என்று மத்திய அரசின் தடையை அச்செயலி கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது.
இதுகுறித்து டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் கூறுகையில், வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு விதித்துள்ள இந்தத் தற்காலிகத் தடை எதையும் நிறுத்திவிடப் போவதில்லை என்றும், ஒரு செயலியை முடக்கினால் தகவல்களின் பகிர்வு மற்றொரு செயலிக்கு மாறப்போகிறதே தவிர வினாத்தாள் கசிவு நிற்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை வினாத்தாளைக் கசியவிட்ட உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்காமல், இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களைத்தான் பாதித்துள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு என்பது தேர்வு முகமையின் உள்ளே இருக்கும் நபர்களால் நடப்பதே தவிர, ஒரு செயலியால் அல்ல என்றும், எனவே செயலிக்குத் தடை விதிப்பது தீர்வாகாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
