பிரான்ஸ் நாட்டின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கான ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக தலைவர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம்  எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் தற்பொழுது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி, உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு முன்பாக இரு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது, சமூக ஊடகங்களில் தங்களுக்கு இருக்கும் பிரபலம் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு, இத்தாலி பிரதமர் மெலோனி சிரித்தபடியே, “ஆமாம், நாம் தான் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஜோடி!” என்று பதிலளித்தார். கடந்த மே மாதம் பிரதமர் மோடி ரோம் நகருக்குச் சென்றிருந்தபோது, மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற ‘பார்லே மெலோடி’ மிட்டாயைப் பரிசாக வழங்கியதும், அதற்கு மெலோனி நெகிழ்ச்சியோடு வீடியோ வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இரு தலைவர்களின் இந்த நட்பு வெறும் சமூக ஊடகக் கொண்டாட்டம் மட்டுமல்லாது, இரு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் முக்கிய பங்காளியாக இத்தாலி உருவெடுத்துள்ள நிலையில், இருதரப்பு வர்த்தகம் 16.77 பில்லியன் டாலரைக் கடந்து சாதனை படைத்துள்ளது.