தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் 172 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் நேரடியாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலைப் போலவே, இம்முறையும் தனது தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மையுடன் பலமான நிலையைத் தக்கவைத்துக் கொள்வதோடு, ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளின் தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வியூகம் வகுத்து வருகிறது.

மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய இந்தத் தேர்தலில், திமுக நேரடியாக 172 இடங்களில் களம் காண்பதன் மூலம் தனது வாக்கு வங்கியையும், கட்சியின் பலத்தையும் மீண்டும் நிரூபிக்க முனைப்புக் காட்டி வருகிறது. குறிப்பாக, புதிய அரசியல் வரவான தமிழக வெற்றி கழகம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றின் சவால்களை முறியடிக்க இந்த ‘172 தொகுதி’ கணக்கு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.