நெல்லை நாங்குநேரியில் திங்கட்கிழமை இரவு இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்ட வடு மறைவதற்குள் அதே பகுதியில் மீண்டும் ஒரு கொடூர கொலை நடந்திருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்று சாடியுள்ளார்.
சாதியக் கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் உச்சம் பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் குறிவைத்து கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், “கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கும், ஊர் ஊராக மாநாடுகள் நடத்துவதற்கும் நேரம் ஒதுக்கும் உங்களுக்கு, தமிழகத்திற்கு என ஒரு நிரந்தர டிஜிபியை நியமிக்க இன்னும் நேரம் வரவில்லையா?” என்று கேட்டுள்ளார்.
மக்கள் விரோத ஆட்சியில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இத்தகைய துன்பங்களிலிருந்து மக்களுக்கு எப்போது விடிவு பிறக்கும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
