விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகத் திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வானில் பறக்கும் விமானத்தில் கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதுதான் திமுகவின் சாதனையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தச் சம்பவம் அரங்கேறியிருப்பது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தனது கட்சியினரை ஒடுக்கத் தவறினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள் என்று தினகரன் எச்சரித்துள்ளார்.
பெண்களைப் போகப் பொருட்களாகப் பார்க்கும் போக்கைத் திமுகவினர் கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழக மகளிர் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவுக்குச் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
