தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் மேடையில் பேசிய மேயர் பிரியா, தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். “தமிழகத்தில் இன்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, வெறும் கவர்ச்சியால் ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவர்கள் ஒரு தற்குறி கூட்டம். வேறு என்ன களப்பணியை அவர்கள் செய்துவிட்டார்கள்? ஆட்சியை அமைத்து இத்தனை நாட்கள் ஆகியும் தவெகவின் எந்தவொரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையை மறைக்க திமுக மீது பழி போடுவதாக அவர் கொந்தளித்தார். “முதல்முறை ஆட்சி அமைத்திருக்கும் அவர்கள், தாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு, இன்றைக்கும் திமுகவையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, கொரோனா பேரிடர் காலத்திலும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மக்களுக்காகப் பொறுப்புடன் செயல்பட்டார். ஆனால் இன்று தவெக அமைச்சர்கள் எல்லா துறைகளிலும் இருந்துகொண்டு, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் திமுக மீது பழி போடுகிறார்கள். திமுகவை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? எதற்காக அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறீர்கள்? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றும் மக்களுடனேயே இருக்கும்” என மேயர் பிரியா பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
