டெல்லியிலிருந்து ஜம்முவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குப் புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை (ஜூன் 6) அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா ரயில் நிலையம் அருகே சென்றபோது பயங்கர தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது. ரயில் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டியின் கழிப்பறைப் பகுதி பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.
அடுத்த சில நொடிகளில், அந்தப் பெட்டி தனக்கு முன்னால் இருந்த பெட்டியிலிருந்து தனியாகப் பிரிந்து, ரயில் நடுவழியிலேயே இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அதிர்ஷ்டவசமாக ரயில் அப்போது மிகக் குறைந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்ததால், ரயிலில் இருந்த பயணிகளுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாமல் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துச் சத்தம் கேட்டவுடன் ரயில்வே பணியாளர்கள் சாதுரியமாக ரயிலை நிறுத்தி, பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டனர்.
लुधियाना में रेलवे की बड़ी लापरवाही आई सामने।
वैष्णो देवी से आ रही ट्रेन की एक बोगी का टॉयलेट टूट कर गिरा।
रेल मंत्री @AshwiniVaishnaw जी बड़े-बड़े स्टेशन बनकर उद्योगपतियों को वसूली के लिए देने से अच्छा है कि ट्रेनों की स्थिति सुधारी जाए।
एक्सप्रेस और मेल ट्रेनों की स्थिति… pic.twitter.com/kwV2dAJ5va
— Amit Pandey (@amitpandaynews) June 6, 2026
இதுகுறித்து லூதியானா கூடுதல் காவல் ஆணையர் சமீர் வர்மா மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் சஞ்சீவ் குமார் ஆகியோர் கூறுகையில், “இது குண்டுவெடிப்போ அல்லது சதிவேலையோ அல்ல; வெல்டிங்கில் ஏற்பட்ட பழுது மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பெட்டியின் பேனல் உடைந்துள்ளது. இந்த உடைந்த பெட்டி 15 ஆண்டுகள் பழமையானது” என்று விளக்கமளித்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி ரயில் நிலையத்திலேயே கடைசி நேரத்தில் இந்த பழைய பெட்டி ரயிலில் இணைக்கப்பட்டதாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பஞ்சாபில் தற்போது ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ ஆண்டுவிழாவை முன்னிட்டு ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. பின்னர், விபத்துக்குள்ளான பெட்டியை அகற்றிவிட்டு புதிய பெட்டிகள் சேர்க்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ரயில் மீண்டும் ஜம்மு நோக்கி அனுப்பப்பட்டது.
