திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் ஏரிக்கரையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த  போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ராதா (50) என்பது தெரியவந்தது. அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு, ராதாவும் சுரேஷும் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில், சுரேஷின் மனைவியைப் பற்றி ராதா தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுரேஷ், ராதாவின் தலையை ஏரிக்கரை சுற்றுச்சுவரில் ஓங்கி மோதியுள்ளார். மேலும், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அவரது மண்டையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராதா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்குப் பிறகு பயந்துபோன சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருந்த சுரேஷை தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், நேற்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.