தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா என்ற முப்பத்தைந்து வயது பெண் தனது தம்பியான முத்துராஜாவால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரைப் பிரிந்து ஓராண்டாகத் தனியாக வசித்து வந்த சுமித்ரா கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்தப் பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளார். சுமித்ராவின் நடத்தை குறித்து அவரது தம்பிக்குக் கிடைத்து வந்த தகவல்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட குடும்ப அவமானம் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா தனது அக்கா சுமித்ராவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். நேற்று இரவு தனது நண்பர் வசந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுமித்ராவின் வீட்டிற்குச் சென்ற முத்துராஜா அங்கிருந்த தனது அக்காவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரம் தாங்காமல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமித்ராவைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர் சுமித்ராவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த முத்துராஜா மற்றும் அவரது நண்பர் வசந்த் ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப மானத்தைக் காக்கவே இந்தக் கொலையைச் செய்ததாக முத்துராஜா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.