சென்னையில் விளையாடிக்கொண்டே முந்திரி பருப்பு சாப்பிட்ட இரண்டு வயது சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர், மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஹரிவர்த்தினி, நேற்று இரவு தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி பருப்பு சாப்பிட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக முந்திரி பருப்பு தொண்டையில் சிக்கியதில் சிறுமிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே சிறுமி மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முந்திரி பருப்பு சுவாசப் பாதையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறு குழந்தைகள் உணவு உண்ணும்போது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும், குறிப்பாக இது போன்ற திடமான பருப்பு வகைகளைத் தரும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் வேதனையுடன் நினைவுறுத்துகிறது.
