சென்னையில் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜலட்சுமி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1999-ல் பணியில் சேர்ந்த இவர், 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் 4.62 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைத் தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் குவித்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இவரது அதிகாரப்பூர்வ வருமானத்தை விட 372 சதவீதம் கூடுதலாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திருமங்கலத்தில் உள்ள இவரது வீட்டில் 4 மணி நேரம் நடைபெற்ற அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தன் மீதான புகாரைப் பொய் வழக்கு என்று ராஜலட்சுமி மறுத்தாலும், அவர் சுமார் 80 லட்சம் ரூபாய் சேமிப்பு வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் எந்தெந்த வழக்குகளில் லஞ்சம் வாங்கினார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
