பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் ரகசிய ஏஜென்ட் என்றும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் கூறிக்கொண்டு, சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்து வந்த மனிஷ் குமார் குப்தா என்ற நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மேலும் தன் சொந்த சொகுசு காரில் “இந்திய அரசு” மற்றும் “ஐ.ஏ.எஸ்” என்ற பெயர்ப்பலகைகளைப் பொருத்தி, பிகார் மற்றும் டெல்லி போன்ற இடங்களில் வலம் வந்து பொதுமக்களை மிரட்டியும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் இவர் மாபெரும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் இவரது பிரம்மாண்ட பங்களாவைச் சுற்றி வளைத்த காவல் துறையினர் மற்றும் சிறப்பு புலனாய்வுப் படையினர், பல மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில் இவரது ஒட்டுமொத்தப் போலி சாம்ராஜ்யத்தையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இவரது வீட்டைச் சோதனை செய்த காவல் துறையினருக்கு அங்கு கிடைத்த பொருட்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தியாவில் அரிதாகக் காணப்படும் அதிநவீன ‘டெஸ்லா’ கார், டாட்டா சஃபாரி சொகுசு வாகனம், வீட்டிற்குள் நீச்சல் குளம், பிரத்யேக சினிமா திரையரங்கம், 25-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் என ஒரு கோடீஸ்வரரின் ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
மேலும், அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட 31 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள், விலையுயர்ந்த ஐபோன்கள், பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட மான் கொம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலி அடையாள அட்டை மற்றும் மத்திய அரசு லோகோவைத் தவறாகப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி இவர் பெரும் செல்வத்தைச் சேர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது காவல் துறையினரையே திசைதிருப்ப முயன்ற மனிஷ் குமார் குப்தா, தனது மொபைல் போனில் இருந்த போலி அடையாள அட்டையைக் காட்டி, தான் அஜீத் தோவலின் கீழ் இயங்கும் ரகசிய ஏஜென்ட் என்று கூறியுள்ளார்.
ஆனால், காவல் துறையினர் தீவிரமாகச் சரிபார்த்தபோது அது முற்றிலும் போலி என்பது உறுதியானது. தற்போது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஆள்மாறாட்டம், மோசடி, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிகார் மதுவிலக்குச் சட்டம் ஆகிய பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவு பிரம்மாண்டமான சொத்துக்களை அவர் எவ்வாறு சேர்த்தார் மற்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை வெளிக்கொணர பிகார் மாநிலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
