சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பள்ளிகளுக்குப் பாதுகாப்பான வழித்தடம்’ (Safe School Corridor) என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் கே.கே. நகர் ஆகிய நான்கு பள்ளி மண்டலங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் தலா 10 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

​இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளி நேரங்களில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கச் சிறப்பு ஏற்பாடுகள் (Speed Breakers & Bollards), மாணவர்கள் தடையின்றி நடக்க அகலமான நடைபாதைகள், பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வசதிகள் மற்றும் வழிகாட்டும் மின் பலகைகள் ஆகியவை அமைக்கப்படும். விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்யவும், மாணவர்கள் அச்சமின்றிப் பள்ளிக்கு வரவும் இந்தத் திட்டம் ஒரு முன்னோடி முயற்சியாக அமையும் என மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.