சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக 225 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் வெற்றி விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றும் எம்.ஜி.ஆர். ஒருவரே நிரந்தரமானவர் என்றும் உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார். மேலும் சினிமாவில் நடித்துவிட்டுப் பலரும் எம்.ஜி.ஆர். போல வர வேண்டும் என்று கனவு காண்பதாகவும் ஆனால் அது ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்மைக்காலமாகத் தனது உரைகளில் எம்.ஜி.ஆர். குறித்துப் பேசி வரும் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு விஜயை மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
