அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்தத் தெளிவற்ற நிலையால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், அடுத்தடுத்து மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 75 முக்கிய நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கூட்டணி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ்-ஸை வலியுறுத்தியும், அவர் எந்த முடிவும் எடுக்காததே இந்த ஒட்டுமொத்த விலகலுக்கும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ய ஓபிஎஸ் தயக்கம் காட்டுவதால், அவரது கோட்டையாக இருந்த பகுதிகளிலேயே நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தற்போது காஞ்சிபுரம் நிர்வாகிகள் வெளியேறியிருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு விழுந்த பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை ஓபிஎஸ் கண்டுகொள்ளாதது, அவரது அணியை மேலும் பலவீனப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
