நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இத்தகைய முக்கிய அரசியல் சூழலுக்கு மத்தியில், டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணியில் உள்ள சில முக்கிய கட்சிகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்தன. இந்தத் தேர்தல் தோல்விகள் மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்புகளுக்கு இடையே இக்கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திடீரென தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பக்கமாக கூட்டணி மாறியதைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக, இன்றைய ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்து காங்கிரசுக்கு அதிரடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

இன்னொரு பக்கம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரடியாகத் தாக்கி டெல்லியின் முக்கிய வீதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் பேனர்கள் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான இந்த அதிரடி பேனர்களில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அந்தப் பேனர்களில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி எங்கள் முதுகில் அமர்ந்து கொண்டுதான் முன்னேறியது; ஆனால், இப்போது எங்கள் முதுகிலேயே குத்திவிட்டது!” என்ற காரசாரமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பேனர் விவகாரமும், திமுகவின் புறக்கணிப்பும் ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்காலம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
