திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீழாந்தி வடிகால் வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியன் என்பவர் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் மோப்ப நாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், உயிரிழந்த சுப்பிரமணியனும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் கடைசியாக ஒன்றாகச் சென்றது தெரியவந்தது. சந்திரசேகரைப் பிடித்து விசாரித்தபோது, இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சுப்பிரமணியனின் மனைவி இந்திராவுக்கும், அவரது உறவினரான சந்திரசேகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த சுப்பிரமணியன் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திராவும் சந்திரசேகரும் சேர்ந்து சுப்பிரமணியனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினர். அதன்படி, சுப்பிரமணியனுக்கு மது வாங்கிக் கொடுத்து போதையில் இருந்தபோது, சந்திரசேகர் அவரைத் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்து வாய்க்காலில் வீசியுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய மனைவி இந்திரா மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.