சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.
இது தொடர்பாகக் குடியிருப்புவாசிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்ற தலைவரின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகத் தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் நலனே முக்கியம் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
