10- வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெற வேண்டிய இந்தப் போட்டியைப் பாகிஸ்தான் தவிர்த்தால், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை வாரியம் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், இந்தப் போட்டி நடைபெறவில்லை என்றால் பெரும் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும், ஏற்கனவே விற்கப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் ரத்தாவது இலங்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அதையெல்லாம் கடந்து பாகிஸ்தானுக்குத் தங்கள் அணி பலமுறை சென்று விளையாடியதை இந்தக் கடிதத்தில் இலங்கை வாரியம் நினைவு கூர்ந்துள்ளது.

அந்த நட்புறவின் அடிப்படையில், தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள இத்தொடரை வெற்றிகரமாக நடத்தப் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த ஒற்றைப் போட்டிப் புறக்கணிப்பு முடிவால் ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் ஐசிசி-க்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தானின் அடுத்தகட்ட முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.