கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தனியாகக் காரில் வந்து கொண்டிருந்த மணமகன் ரவிஷ் என்பவரை, ஒரு கும்பல் வழிமறித்துக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில், மணப்பெண் நயனாவின் காதலன் தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த உண்மை வெளியானதையடுத்து, நயனாவைத் திருமணம் செய்ய மறுத்த ரவிஷ், திருமணத்தை ரத்து செய்தார்.
விசாரணையில் மணப்பெண் நயனாவுக்கும் பவுன்சராக வேலை பார்க்கும் தர்ஷனுக்கும் இடையே காதல் இருந்தது அம்பலமானது. தனது வீட்டின் கௌரவத்திற்குப் பயந்து நயனா திருமணத்தை நிறுத்த மறுத்ததோடு, எப்படியாவது திருமணத்தைத் தடுத்து நிறுத்துமாறு தனது காதலன் தர்ஷனை வற்புறுத்தியுள்ளார்.
இதற்காக மணமகனின் செல்போன் எண்ணையும் கொடுத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது மணப்பெண் நயனா, அவரது காதலன் தர்ஷன் மற்றும் ஒரு சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
