பாகல்பூர் மேம்பாலத்தில் தற்கொலை செய்ய முயன்ற தாயையும் அவரது பச்சிளம் குழந்தையையும், 37 வினாடிகளில் அதிரடியாகச் செயல்பட்டு ஒரு காவல் அதிகாரி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கங்கையாற்றின் சீறிப்பாயும் அலைகளுக்கு மேலே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண் தனது குழந்தையுடன் குதிக்கத் தயாராக இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாகப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ‘டயல் 112’ அவசரப்பிரிவு உதவி ஆய்வாளர் சிக்கந்தர் குமார், இதைப் பார்த்ததும் உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்திச் செயல்படத் தொடங்கினார்.

அதிகாரி சிக்கந்தர் குமார் மிகவும் சாமர்த்தியமாக அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசைதிருப்பினார். அந்தப் பெண் நிலைதடுமாறி குதிக்கும் முன், மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பிடித்து இழுத்தார்.

“>

 

வெறும் 37 வினாடிகளில் நடந்த இந்த உயிர்காக்கும் போராட்டம் அந்தப் பிஞ்சு உயிருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. எதற்காக அந்தப் பெண் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை என்றாலும், சரியான நேரத்தில் ‘கடவுள்’ போல வந்து காப்பாற்றிய அந்த அதிகாரியின் வீரத்தையும் மனிதாபிமானத்தையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.