சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியானாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் இதயத்தைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், ஒரு தந்தை தனது மகன் மற்றும் மகள் இருவர் மீதும் காட்டும் சமமான அன்பை வெளிப்படுத்தும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது மகனுக்குப் புத்தம் புதிய ‘ஐபோன்’  ஒன்றை பரிசாக வழங்குகிறார். அதைத் தன் கையில் வாங்கிய மகன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க, அதற்கு அருகில் அமர்ந்திருக்கும் அவரது மகள், அண்ணனுக்குக் கிடைத்த போனை ஏக்கத்துடன் பார்க்கிறாள்.

முகத்தில் புன்னகையை வரவழைக்க முயன்றாலும், தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றமும் சோகமும் அவளது கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. மகளின் இந்த முக மாற்றத்தைக் கவனித்த தந்தை, அடுத்த நொடியே தனது பின்னால் மறைத்து வைத்திருந்த மற்றொரு புதிய ஐபோன் பெட்டியை எடுத்து மகள் அருகில் வைக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by India Speaks (@indiaspeaks56)

அண்ணன் தனது போனைத் திறந்து கொண்டிருக்கும் வேளையில், தன்பக்கத்தில் இருக்கும் ஐபோன் பெட்டியைப் பார்த்த அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தனக்கும் ஐபோன் கிடைத்துவிட்டதை உணர்ந்த அந்தப் பெண் ஆனந்தக் கண்ணீருடன் துள்ளிக் குதிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்திலும் பல குடும்பங்களில் ஆண், பெண் பிள்ளைகளுக்கு இடையே பாகுபாடு காட்டப்படும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த வீடியோ சமூகத்திற்கு ஒரு மிகச்சிறந்த நேர்மறை செய்தியைக் கடத்தியுள்ளது.

மேலும் “தந்தைகள் எப்போதும் நிஜமான கடவுள்தான்”, “மகனுக்கும் மகளுக்கும் சமமான அன்பு” என இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அந்தத் தந்தையைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். பெண் பிள்ளைகளைக் குறைவாக மதிப்பிடும் குடும்பங்களுக்கு இந்தத் தந்தையின் செயல் ஒரு மிகச்சிறந்த பாடம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.