2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கேரளா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரைபடத்தில் கேரளா இருப்பதையே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகச் சாடியுள்ள அவர், இது மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாட்டை அம்பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் நீண்டகாலக் கோரிக்கைகளான எய்ம்ஸ்  மருத்துவமனை, ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுகத்திற்கான சிறப்புத் திட்டங்கள் போன்றவை இந்த பட்ஜெட்டில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் வேதனை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 41 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது, கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் வகையிலும் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்து மௌனம் காக்காமல் தகுந்த பதிலளிக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.