மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், நாய் கடித்த சில வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு, அரசு மருத்துவமனையில் ரேபிஸ் எதிர்ப்பு ஊசிகளும் டெட்டனஸ் ஊசியும் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சில வாரங்கள் கழித்து சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 30-ஆம் தேதி அந்தச் சிறுவன் உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளின் மெத்தனப் போக்கே சிறுவனின் மரணத்திற்கு காரணம் என உள்ளூர் எம்.எல்.ஏ ராயிஸ் ஷேக் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஊழியர்கள் கவனக்குறைவாகச் செயல்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவன் உயிரிழந்தது நாய்க்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் பாதிப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.