தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது அரசியல் பயணம் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் விரிவாகப் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:
“நான் திமுகவில் சேரப்போவதாகப் பரவும் தகவல்களில் துளியும் உண்மையில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட திமுகவில் இணைவது என்பது என் வாழ்நாளில் ஒருபோதும் நடக்காது. ஈரோடு மக்கள் சந்திப்பிலேயே திமுக-வை ‘தீய சக்தி’ என விஜய் பிரகடனப்படுத்திவிட்டார். தவெக-வை திமுக-வின் ‘பி’ டீம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.”
“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல ஒரு நல்ல தலைவராக விஜய் விளங்குகிறார். அதனால்தான் தவெக எனக்குச் சிறந்த தேர்வாக அமைந்தது. விஜய்க்கு தற்போது 34 சதவீத வாக்குகள் உள்ளன. அவருடைய கொள்கைகள் குறித்துக் கேள்வி எழுப்புபவர்களுக்கு, காஞ்சீபுரத்தில் அவர் அறிவித்த திட்டங்களே தகுந்த பதிலடியாக அமையும்.”
தனது அரசியல் கடந்த காலம் குறித்துப் பேசிய அவர், “நான்தான் எடப்பாடி பழனிசாமியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினேன். ஆனால், நான் வளர்த்துவிட்ட ஒருவரே என்னை நீக்கியதை நினைத்து இரண்டு நாட்கள் தூங்காமல் அழுதேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதேபோல், கூவத்தூர் நிகழ்வின்போது சசிகலா என்னை அழைத்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கூறினார்; ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன். அதிமுக-வை ஒன்றிணைக்க நான் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன” என்றார்.
“காங்கிரஸ் தற்போது இரண்டு பிரிவுகளாக உள்ளது. அவர்களின் செயல்பாடுகளைக் கணிப்பது கடினம். இருப்பினும், ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.” திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட விவகாரங்களில் கருத்து கூறாததால் பாஜக-வுடன் விஜய் கூட்டணி வைப்பாரா என கேட்கிறார்கள். ஆனால், தவெக-வின் கொள்கை எதிரி பாஜக என்பதில் விஜய் மிகத் தெளிவாக இருக்கிறார் என்றார்.
மேலும் பாஜக – அதிமுக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, “அது தலைவர்களின் மனநிலையைப் பொறுத்தது” என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.
