அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைந்தார்.

சமீபத்தில் பாஜக-வுடன் அமமுக கூட்டணி அமைத்ததற்கு கடம்பூர் மாணிக்கராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கட்சியின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த அவர், தலைமைக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தார். இதன் காரணமாக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அவர் அமமுக-வில் இருந்து அதிருப்தி அடிப்படையில் நீக்கப்பட்டார். அதே நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அவர் புறக்கணித்ததோடு திமுகவில் இணைவதாக செய்திகள் வந்ததால் டிடிவி தினகரன் இந்த முடிவை எடுத்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த மாணிக்கராஜா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருடன் அந்த கட்சியின் மூன்று மாவட்ட செயலாளர்களும் இணைந்தனர்.

இணைப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் மாணிக்கராஜா கூறியதாவது:

“பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் நான் அமமுக-வில் இருந்து வெளியேறினேன். தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சியைப் பாராட்டி திமுக-வில் இணைந்துள்ளேன். என்னைத் தொடர்ந்து, அமமுக-வில் உள்ள மேலும் பல அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விரைவில் திமுக-வில் இணைய உள்ளனர்.”

இந்த இணைவின் போது திமுக-வின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். மாணிக்கராஜாவின் இந்த முடிவு, தென் மாவட்டங்களில் அமமுக-விற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.