2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நகைக்கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமான நான்கு முக்கிய மாற்றங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகைக்கடன் வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு  ‘முன்னுரிமைத் துறை கடன்’  அந்தஸ்து வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனங்களின் நிதிச் செலவு குறைந்து, பொதுமக்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்க வழிவகை ஏற்படும்.

இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே கடன் வசதியை எளிதாகக் கொண்டு சேர்க்கும். மற்றொரு முக்கிய மாற்றமாக, தங்கம் சார்ந்த கடன் வசதியை UPI உடன் இணைக்கும் திட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் நகைகளை அடமானமாக வைத்துவிட்டு, தேவைப்படும்போது மட்டும் UPI ஆப் வழியாகப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கிரெடிட் கார்டுகளை விடக் குறைந்த வட்டியில் கிடைப்பதுடன், அவசரத் தேவைகளுக்கும் சிறு வணிகங்களுக்கும் உடனடிப் பணப்புழக்கத்தை உருவாக்கும்.

மேலும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம், அவை அதிக மக்களுக்குத் தடையின்றி நிதி உதவி வழங்கவும் பட்ஜெட்டில் வழிவகை செய்யப்படலாம்.

முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்கள் மீதான வரி விதிப்புகளை எளிமையாக்க அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, இதற்கான TDS விதிகளைத் தளர்த்துவது சில்லறை முதலீட்டாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் பாதுகாப்பான வருமானத்தைத் தரும்.

இந்த ஒட்டுமொத்த மாற்றங்களும் நடைமுறைக்கு வந்தால், சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பங்களும், சிறு தொழில் முனைவோரும் குறைந்த செலவில் எளிதாகக் கடன் பெற்றுத் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.