புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சுஜன் என்பவரிடம், அசார், இஸ்மாயில், ஜலால் மற்றும் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் கடந்த 10 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இறைச்சியைத் திருடி நூதன முறையில் மோசடி செய்து வந்துள்ளனர். ஒரு கிலோ இறைச்சி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றரை கிலோ வெட்டி, அதில் ஒரு கிலோவை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி அரை கிலோவை ரகசியமாகச் சேமித்து வைத்துள்ளனர்.

தினமும் இவ்வாறு சேகரிக்கும் 10 முதல் 15 கிலோ இறைச்சியை “கோழிக் கழிவுகள்” என்று கூறி மூட்டையில் கட்டி எடுத்துச் சென்று, வெளி உணவகங்களுக்குக் குறைந்த விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.

வியாபாரம் நன்றாக நடந்தும் லாபம் கிடைக்காததால் சந்தேகமடைந்த உரிமையாளர் சுஜன், ஒருநாள் ஊழியர்கள் கொண்டு சென்ற மூட்டையைச் சோதனை செய்தபோது இந்தத் திருட்டு அம்பலமானது.

கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

நம்பிக்கைக்குரிய ஊழியர்களே இவ்வளவு பெரிய தொகையைச் சுருட்டியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுஜன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மற்ற வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.