பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்து மனிதநேயமற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஏழாம் வகுப்பு படிக்கும் ரித்தேஷ் குமார் என்ற மாணவர் கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது, வேகமாக வந்த ஒரு பிக்கப் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு ஓடி வந்த மாணவனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். ஆனால், அங்கு கூடியிருந்த பலரும் சிறுவனின் உயிரை மதிக்காமல் விபத்துக்குக் காரணமான வேனில் இருந்த மீன்களைச் சூறையாடுவதிலேயே குறியாக இருந்தனர்.
வேனில் இருந்து சாலையில் சிதறிக் கிடந்த மீன்களைச் சேகரிக்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பைகளை நிரப்பிச் சென்றனர். ஒரு பக்கம் மாணவனின் உடல் கிடந்தும், இரக்கமின்றி மீன்களைத் திருடிச் சென்ற இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்துவிட்டு, சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
