பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தில், சாப்பாடு பரிமாறுவதில் ஏற்பட்ட மிகச் சாதாரண ஒரு தகாறானது கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தின் செயின்புரா இமாத்பூர் கிராமத்தில், கொழுந்தன் ஒருவன் தனது அண்ணியைக் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். இந்தத் திடுக்கிடும் சம்பவத்தால் அந்த கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
இது பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, புதன்கிழமை காலை நேரத்தில் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் நெல் நடுவு பணிக்காக வயலுக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்தில், வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய கொழுந்தனான குணால் குமார், தனது அண்ணி அன்ஷு குமாரிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அன்ஷு குமாரியும் தட்டில் சாப்பாடு பரிமாறி அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், சாப்பாடு பரிமாறும்போது அன்ஷு குமாரியின் கைகளில் லேசாக மண் ஒட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த குணால் குமார் கடும் ஆத்திரமடைந்து அண்ணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சாதாரண வாக்குவாதம் கண் இமைக்கும் நேரத்தில் பெரிய சண்டையாக மாறியது. ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற குணால் குமார், முதலில் அன்ஷு குமாரியைக் கொடூரமாகத் தாக்கி தரையில் தள்ளியுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து அன்ஷு குமாரியை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அன்ஷு குமாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு அந்த வீட்டின் முன்பு குவிந்தனர்.
சம்பவம் நடந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அன்ஷு குமாரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக் குற்றவாளியான குணால் குமாரைக் காவல்துறையினர் உடனடியாகத் தடுத்துக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அன்ஷு குமாரிக்கு, தர்மேந்திர குமார் என்பவருடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
