பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவருக்கும் ராணி குமாரிக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ராணிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் காதல் மலர்ந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்த இந்தக் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்குத் தெரியவந்ததால், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தன. பலமுறை சமாதானம் செய்தும், ராணி தனது காதலனுடன் செல்வதிலேயே குறியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் குந்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
தன் மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்த குந்தன், இருதரப்பிலும் பேசி சம்மதம் பெற்றார். பின்னர், இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரப்பூர்வமாகப் பதிவுத் திருமணம் செய்து வைத்ததுடன், அந்தத் திருமணத்திற்குத் தானே சாட்சிக் கையெழுத்தும் போட்டார்.
தனது மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறி, மனைவியையும் அவரது காதலனையும் சிரித்த முகத்துடன் அவர் வழி அனுப்பி வைத்தார். மனைவியின் காதலுக்காகத் கணவரே முன்னின்று திருமணம் செய்து வைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
