அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஒரு ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ எனச் சாடி, அவர் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
வெனிசுலாவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில், சமீபத்தில் அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
அவர்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதச் சதி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்காக எடுக்கப்பட்டதாக உலக நாடுகள் விமர்சித்தாலும், அமெரிக்கா இதனைத் தனது நாட்டின் பாதுகாப்பிற்கான நீதியாகவே பார்க்கிறது.
வெனிசுலாவைத் தொடர்ந்து தற்போது கொலம்பியா மீதும் டிரம்பின் பார்வை திரும்பியுள்ளது. கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோவுக்கும் டிரம்புக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மோதல் காரணமாக, அந்நாட்டின் மீதும் ராணுவ நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கொலம்பியாவில் உள்ள ‘படுகொலை முகாம்களை’ உடனடியாக மூட வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்காவே தலையிட்டு அதனைச் செய்யும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மதுரோவைப் போலவே பெட்ரோவும் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பிய அதிபரும் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு உலக அரசியலில் எழுந்துள்ளது.
