தேனி மாவட்டம் குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குச்சனூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலும், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு அருகிலும் மின் மயானம் அமைக்கக் கூடாது என ஒரு தரப்பினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சனீஸ்வர பகவான் கோயிலில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிய மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனை வழிமறித்த கிராம மக்கள், மயானத் திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி முழக்கமிட்டதுடன் அவரது காரை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் ஆவேசமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், காரில் இருந்து இறங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரை விலக்கிவிட்டு போராட்டக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர், பொதுமக்களை நோக்கி ஒருமையில் பேசியதுடன் கைநீட்டி தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போர்க்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து, மக்களின் விருப்பத்திற்கு மாறாக இத்திட்டம் செயல்படுத்தப்படாது எனத் தெரிவித்த அவர், அங்கிருந்து காரில் விரைந்து சென்றார்.
புனிதமான கோயில் வளாகத்தில் எம்.பி.க்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
