கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரத்தில் அடுத்தடுத்து அரை கிலோ மீட்டர் இடைவெளியில், இரண்டு மனித உடல்கள் தீயால் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் மற்றும் அவரது தந்தை செல்லப்பன் என்பது கண்டறியப்பட்டது.

ராணுவப் பணியின் காரணமாக மகேஷ்குமார் வீட்டில் இல்லாத சூழலைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவி பானுப்பிரியா, பூவரசன் என்ற பத்தொன்பது வயது இளைஞருடன் நெருங்கிய உறவில் இருந்துள்ளார். இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்து தங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததால், பானுப்பிரியாவும் அவரது கள்ளக்காதலனும் இணைந்து மகேஷ்குமாரையும் அவரது தந்தையையும் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, ஒரு நாள் இரவு தந்தை மற்றும் மகன் இருவரையும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த அந்த ஜோடி, சடலங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று மக்கள் நடமாட்டமில்லாத சாலையோரத்தில் வீசியுள்ளனர். பின்னர், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகப் பெட்ரோல், டீசல்மற்றும் தென்னை ஓலைகளைப் பயன்படுத்தி உடல்களைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாலுக்கா காவல் துறையினர், தடயங்கள் மற்றும் சுற்றுப்புறச் சான்றுகளைக் கொண்டு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே கொலையாளிகளான பானுப்பிரியா மற்றும் பூவரசனைச் சட்டத்தின் பிடியில் கொண்டு வந்தனர்.

தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரின் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. தற்பொழுது பூவரசன் மத்திய சிறையிலும், பானுப்பிரியா மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.