கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டி அருகே உள்ள புளிக்கல்லில், புதன்கிழமை காலை 8:30 மணியளவில் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பிரதான சாலையின் நடுவே ஒரு பச்சிளம் குழந்தை திடீரென முட்டிப்போட்டு தவழ்ந்து வந்து அமர்ந்திருந்தது. அந்தச் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்ததால், குழந்தையின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநர், சாலையின் நடுவில் குழந்தை இருப்பதைக் கண்டு சாதுரியமாக பேருந்தை நிறுத்தினார். உடனே, பேருந்தின் நடத்துநர் (கண்டக்டர்) கீழே குதித்து ஓடி, நடுரோட்டில் இருந்த குழந்தையை பத்திரமாக தூக்கி மீட்டார். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Kondotty, Malappuram
A baby who crawled onto a busy roadway was safely rescued by a bus crew after they promptly stopped and intervened. #Kondotty #Malappuram #India #Baby pic.twitter.com/u66FYhD3Sr
— The Premium 24 (@ThePremium24X) June 10, 2026
மீட்கப்பட்ட குழந்தையை கையில் ஏந்தியபடி நடத்துநர் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று விசாரித்தபோதுதான், அங்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் தந்தை வீட்டின் முன்றிலில் அமர்ந்து தீவிரமாக செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்ததால், பெற்றோர் கவனிக்காத நேரத்தில் குழந்தை மெல்ல தவழ்ந்து வந்து, பரபரப்பான பிரதான சாலைக்கு வந்துள்ளது.
நடத்துநர் குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்த பிறகுதான், தங்களது குழந்தை காணாமல் போன விபரமே அந்த பெற்றோருக்குத் தெரியவந்தது. பேருந்து ஊழியர்களின் இந்த சாதுரியமான செயலால் ஒரு பிஞ்சு உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது. இச்சம்பவத்தைக் குறிப்பிட்ட சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எப்போதும் ஒரு கண் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
