பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அரசு மருத்துவமனை பெண் மருத்துவரான மீனாட்சி சூத், தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கணவர் பியூஷ் சூத், அங்குள்ள ஒரு கண் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அன்று மீனாட்சியின் உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து மீனாட்சியின் பெற்றோர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், தனது கணவரின் மருத்துவமனையிலேயே வேலை பார்க்கும் ஒரு நர்ஸுடன் பியூஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை மீனாட்சி நேரில் கண்டித்ததால், அவர் கணவரால் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் சிசிடிவிகாட்சிகளை மீனாட்சி ஆய்வு செய்தபோது, அவரது கணவர் நர்ஸுடன் நெருக்கமாக இருந்த அதிர்ச்சி ஆதாரங்கள் சிக்கியதோடு, அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கணவரின் கொடுமை தாளாமல் கடந்த 2025 ஜூலை முதல் மீனாட்சி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனக்கென ஒரு புதிய வீடு வாங்க வங்கிக்குச் சென்றபோதுதான் மற்றொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. மீனாட்சியின் கையெழுத்தை போலியாகப் போட்டு, அவரது பெயரில் கணவர் பியூஷ் சுமார் 2.5 கோடி ரூபாய் வரை பெரும் தொகையைக் கடனாகப் பெற்றிருப்பது தெரியவந்தது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மீனாட்சி விவாகரத்து பெறத் தயாராகி வந்த நிலையில், தற்போது மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள கணவர் பியூஷை உடனடியாகக் கைது செய்யக் கோரி பெற்றோர் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
