சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ‘370 ரூபாய் பிரியாணி’ சர்ச்சை அடங்குவதற்குள், ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரேவின் புதிய வீடியோ ஒன்று கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவரது நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் பெண் மருத்துவர் ஒருவர், தனது மருத்துவக் கல்லூரி மற்றும் போஸ்ட்மார்ட்டம் (பிரேத பரிசோதனை) அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, பிரேத பரிசோதனை அறையில் நடக்கும் சூழல் குறித்து காமெடியன் கேட்ட கேள்விக்கு,  தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்புகள்  குறித்து நானும் தோழியும் கேலி செய்து சிரித்து கொள்வோம் என்று அந்த மருத்துவர் சிரித்தபடியே கூறினார். இந்த வீடியோ கிளிப் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மருத்துவப் படிப்புக்காகவும், அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் தங்களது உடலை தானமாக வழங்கும் மனிதர்களின் சடலங்களை இப்படி அவமதிப்பது, அநாகரிகமானது மற்றும் மனிதநேயமற்றது என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர். இறந்தவர்களின் கண்ணியத்தை காக்க வேண்டிய மருத்துவர்களே இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவது மருத்துவ உலகிற்கே அசிங்கம் என்றும், இத்தகைய உணர்ச்சியற்ற பேச்சுகளை வியூஸுக்காகவும் (Views) விளம்பரத்திற்காகவும் தனது மேடையில் அனுமதித்த காமெடியன் பிரணித் மோரேவும் இந்த குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். முன்னதாக நடந்த பிரியாணி சர்ச்சைக்கு எழுந்த எதிர்ப்பை விட, மனித உடலை கொச்சைப்படுத்திய இந்த விவகாரத்திற்கு ஏன் இன்னும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை என்ற கேள்வியையும் பலர் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.