அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகள் தற்போது மீறப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளரைத் தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மீட்டெடுக்கத் தங்களது சட்டப் போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
தவறு செய்பவர்களுக்குத் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று ஓபிஎஸ் சுருக்கமாகப் பதிலளித்தார்.
தாங்கள் தற்போது என்டிஏ கூட்டணியில் இல்லை என்றும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஏற்கனவே விளக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் கூட்டணி குறித்து அவர் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், வரும் தை மாதத்தில் அவர் எடுக்கப்போகும் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
