சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அடங்கிய ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்’ அமைப்பு, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒரு விரிவான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுமார் 81,375 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பின்னடைவைச் சந்தித்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், புதிதாகக் கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் என்றும் இந்தக் கணிப்பு கூறுகிறது.
குறிப்பாக, இளம் வாக்காளர்களைக் கவர்ந்த தலைவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திலும், அவருக்கு அடுத்தபடியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் உள்ளனர். விஜய்யின் அரசியல் வருகை அதிமுக மற்றும் விசிகவை விட திமுகவிற்கே அதிக தேர்தல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மக்கள் கருதுகின்றனர்.
அதே சமயம், நாம் தமிழர் கட்சிக்கு விஜய்யால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பார்கள் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
